Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Friday, December 08, 2006

இது ஒரு கதை

கண்களெல்லாம் மிளகாய்ப் பொடியால் எரிந்து கொண்டிருந்தது அவனுக்கு, ஆனால் சந்தோசமாக இருந்தான்.
காரணம் கோவிலுக்குள் சென்றதுதான். அவன் வம்சத்திலேயே கோயிலுக்குள் நுழைந்த முதல் மனிதன் அவன்தான்.
அதனால் சந்தோசமாக உணர்ந்தான். கூட்டமாக கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கையில் யாரேனும் தடுப்பார்களென்று எதிர்பார்த்ததுதான். போலீஸ் கொண்டு தடுப்பார்களென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் மிளகாய்பொடி தூவி, அதுவும் பெண்கள் தடுப்பார்களென்று அவன் சிறிதும் எதிபார்க்கவில்லை. அவர்கள் வந்து சென்றபின் "தீட்டு" என்று கோவிலைக் கழுவி விட்டதாகக் கூட கேள்விப்பட்டான். தனக்குள் சிறித்துக்கொண்டான். மிளகாய்ப்பொடி எரிச்சல் கழுவினால் போய்விடும். ஆனால் அந்த ஈரோட்டுக் கிழவனோடு சேர்ந்து போராடி பெற்ற வழிபாட்டு உரிமையை யாராலும் இனி பிடுங்கிவிட முடியாது.

மகனுக்கு பக்தி அதிகம். தினம் கோவிலுக்கு செல்வான். ஒரு நாள் அவன் தந்தை அவர் எப்படி கோவிலுக்குள் முதன் முறை சென்ற பொழுது "வரவேற்கப்பட்டார்" என்பதை விளக்கினார். மகன் ஆச்சரியத்தோடும், மரியாதையோடும் தன் தந்தை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

பேரனுக்கு தாத்தாவின் அனுபவம் பற்றி தெரியாது. அப்பாவை விட பக்தி அதிகம். வெறியும் உண்டு. அவன் ஊருக்கு வந்த காவியுடை பெரியவர் பேசிய பேச்சில் நரம்பெல்லாம் சூடேறி விட்டது அவனுக்கு. அவன் சொல் பேச்சு கேட்கும் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு செல்கிறான் ஸ்ரீரங்கம் நோக்கி கையில் சுத்தியலோடு. அவனுக்கு நீங்கள் யாரேனும் சொல்லுங்களேன் அவன் தாத்தாவின் அனுபவத்தைப் பற்றி.

1 Comments:

Post a Comment

<< Home